முஸ்லிம்களது மாபெரும் அணிதிரளலான ஹஜ் கிரியைக்குப் பின்பு இஸ்லாமிய உம்மத் ஹிஜ்ரத்தை நினைவுகூரத் தயாராகிவிடும்.
ஹிஜ்ரத் என்ற அறபு மொழிச்சொல் விட்டுச் செல்லல், துறந்து செல்லல் போன்ற கருத்துக்களைத் தரும். நபி (ஸல்) அவர்கள் தான் பிறந்த தாயக மண் மக்காவை விட்டும் பிற்காலத்தில் மதீனதுந் நபி எனப்பட்ட யத்ரிப் நகரை நோக்கிச் சென்றதை இஸ்லாமிய வரலாறு ஹிஜ்ரத் என்கிறது. 

நபியவர்கள் ஹிஜ்ரத் புலம்பெயர்வதற்கு முன்பே ஏறத்தாழ மக்காவைச் சார்ந்த பெரும்பாலான நபித் தோழர்களும் மதீனாவை அடைந்திருந்தனர். நபித் தோழர்களது ஹிஜ்ரத் எட்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றிகொள்ளப்படும் வரைக்கும் தொடர்ந்தது. 

யத்ரிபுக்குச் செல்ல முன்பே ஹபஷா (இன்றைய எதியோப்பியா) பகுதிக்கு இரு தடவைகளில் நபித் தோழர்கள் அனுப்பப்பாட்டிருந்த போதிலும், யத்ரிப் (மதீனா) நோக்கிய புலப்பெயர்வு தான் ஹிஜ்ரத் என்பதன் மூலம் நாடப்படுகிறது. 

இதனை விடவும் ‘ஹிஜ்ரத்’ எனும் புலப்பெயர்வு நபிமார்களுக்கு அல்லாஹ் விதித்த ஒரு நியதியாகவும் கருதப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பல நபிமார்களும் தமது பிறந்தகங்களை விட்டும் புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 

நபி (ஸல்) அவர்களுக்கு வஹி அருளப்பட்ட முதற்கணம் எழுந்த அச்சத்தால் துணைவியார் கதீஜா (ரழி) அவர்களுடன் அவரது உறவுக்காரரும் வேதங்கள் பற்றி அறிந்திருந்த வயோதிப மனிதரான வரகத் பின் நவ்பலிடம் சென்ற போது அவரும் “உமது ஊரார் உம்மை இவ்வூரை விட்டும் வெளியேற்றும் போது நான் உங்களுக்குத் துணையாக இருக்க உயிர்பிழைத்து வாழவேண்டுமே!” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இக்கருத்துக்களும் பின்னணிகளும் நபிமார்களது வாழ்வில் ஹிஜ்ரத் என்பது நியதி எனப் புரியவைக்கின்றது. அது தஃவா இயங்கியலில் தவிர்க்க முடியாத அம்சம். எனவே ஹிஜ்ரத் என்பது உயிர்பிழைப்பதற்காகத் தப்பியோடுதல் அல்ல. மாற்றாக தஃவாவில் அதுவொரு மகத்தான மைல்கல்லாகும். உமர் (ரழி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட பொழுது ஹிஜ்ரத் நிகழ்வுதான் இறுதியில் தெரிவானது. 

நபி (ஸல்) அவர்களது பிறப்பு, மரணம், நுபுவ்வத், மிஃராஜ், பத்ர் மற்றும் மக்கா வெற்றிகள் போன்ற இன்னோரன்ன முக்கிய நிகழ்வுகள் நபியவர்களது சீறாவிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இருந்தபோதும் ஹிஜ்ரத் உமர் (ரழி) அவர்களிடம் முதலிடம் பெற்று இஸ்லாமிய வருடக் கணிப்பீடு ஹிஜ்ரத்திலிருந்து துவங்கியது. இதனால்தான் ஹிஜ்ரத்தை சீறாவின் மகத்துவம் பொருந்திய பாய்ச்சல் என்போம். 

ஹுனைன் யுத்தத்துக்குப் பின்பு ஃஙனீமத் பொருட்களைப் பங்குகொடுத்தது பற்றி அன்ஸாரி தோழர்கள் சிலர் மத்தியில் சிறு அதிருப்தி நிலை எழுந்து அதனை நபியவர்கள் சமாதானப்படுத்திவிடும் போது “ஹிஜ்ரத் என்ற சிறப்பு மாத்திரம் இல்லையெனின் தானும் அன்ஸாரிகளைச் சார்ந்தவராக மாறிவிட்டிருப்பேன்” என்று சொல்லும்போது ஹிஜ்ரத்துடைய உன்னதத்தை நாம் புரிந்துகொள்கிறோம். 

நபியவர்கள் அலி (ரழி) அவர்களை தமது படுக்கையில் உறங்கச் சொல்லிவிட்டு அபூபக்ர் (ரழி) அவர்களோடு மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற பயணம், அதில் இடம்பெற்ற அற்புத சம்பவங்களையும் இறுதியாக ‘தலஅல் பத்று’ வரவேற்புப் நிகழ்வும் அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்களது வீட்டின் முன்னால் நபியவர்களது ஒட்டகம் தரித்தது வரைக்கும் சம்பவங்களாகவும் கதைகளாகவும் நமது நினைவுகளில் தங்கிவிட்டதற்கு அப்பால் நம்மத்தியில் கவனம் கொடுக்கப்பட வேண்டிய அம்சமாக ஹிஜ்ரத் இருக்க வேண்டும். 

ஏன் அவ்வாறான கவனம் அவசியமானது? ஹிஜ்ரத் என்பது முஸ்லிம்களது இருப்புக்கான போராட்டத்தின் முக்கிய தீர்மானம். ஏனெனில் முஸ்லிம்களது இருப்புத்தான் இஸ்லாத்தின் இருப்பாகும். இஸ்லாத்தின் இருப்புக்காக இஸ்லாத்தின் அடிநாதம் ‘தௌஹீத் – ஏக இறை’ கொள்கையை நிலைநாட்ட உலகில் கட்டப்பட்ட ஆலயம் கஃபாவை விட்டுவிட்டு வேறொரு நகருக்குச் செல்லும் தீர்மானத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொள்கிறார். அடுத்து, ஹிஜ்ரத்தினது திட்டமிடல்கள் காலத்தால் வெகுமுற்போக்கானவை. 

ஹிஜ்ரத் நிகழ்வினது திட்டமிடல் நுணுக்கங்கள் பற்றி ஏராளம் ஆய்வுகள் அறபுலகிலும் மேற்கு நாடுகளிலும் வெளிவந்திருக்கின்றன. ஹிஜ்ரத்தில் திட்டமிடல் பற்றிய மேலோட்டமான பார்வையொன்றை இவ்வாறு நோக்க முடியும்: 

1- நபியவர்கள் அல்லாஹ்வின்பால் முழுமையாக தவக்குல் வைத்ததோடு பயணத்தின் இலக்குகளை தெளிவாக வரையறுத்திருந்தார். அத்தோடு ஹிஜ்ரத்துக்கான முன்னேற்பாடுகள், சாதனங்கள், கூடவருகை தருவோர் என்பன முற்கூட்டி நிச்சயிக்கப்பட்டிருந்தன. 

2- திடுதிப்பென ஓரிரவுக்குள் மேற்கொள்ளப்பட்டதல்ல ஹிஜ்ரத். அதற்கென இரவுபகலாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பலம்-பலவீனங்கள் ஆராயப்பட்டு ஒவ்வொரு இலக்கை அடைவதற்கும் பாதை வரையப்பட்ட பயணமாக ஹிஜ்ரத் அமைந்தது. 

3- அவசியப்படும் மனித வளங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் சிறப்புறத் தயார்செய்யப்பட்டிருந்தது. 

அப்துல்லாஹ் பின் அபூபக்ர் இரவில் மக்காவிலிருந்து செய்திகளைக் கொண்டுவந்து தருவார். ஆமிர் இப்னு புஹைரா எனும் இடையர் பாலைவன பாதை நெடுகிலும் மனிதர் பயணம் செய்துள்ளனர் எனக் காட்டிக் கொடுக்கும் பாதச் சுவடுகளைத் தனது மந்தை மூலம் தொடர்ந்து அழித்துக் கொண்டே வந்தார். அவர்களது வழிகாட்டியாக செயல்பட்ட அப்துல்லாஹ் பின் உரைகித் முஸ்லிம் அல்லாத ஒருவர். 

அஸ்மா பின்த் அபூபக்ர் உணவையும் ஏனைய கட்டுச்சாதனங்களையும் கொண்டுவருவார். இங்கு நபியவர்கள் பெண்களது பங்களிப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதை நோக்குகிறோம். எல்லாத் திட்டமிடலிலும் சாதுரியம், தந்திரோபாயத்துக்கு முக்கிய இடமுண்டு. அவ்வாறே உடற்பலத்துக்கும் முக்கிய இடத்தை நபியவர்கள் வழங்கி அலி இப்னு அபீதாலிபைத் தனது படுக்கையில் பாசாங்காக நித்திரைகொள்ளப் பணித்திருந்தார். ஏனெனில் அலி சாதுரியம் மிக்கவர் என்பதோடு எந்த சூழ்நிலையையும் துணிகரத்தோடு எதிர்நோக்கும் தீரம்கொண்டவர். 

4- ஹிஜ்ரத் மேற்கொண்டு செல்லப் போகும் யத்ரிப் நகர் குறித்த ஆழமான பார்வையை நபியவர்கள் கொண்டிருந்தார். மதீனாவை அடைந்தவுடன் அங்கு மத்திய தளமாக மஸ்ஜிதுந் நபவியை அமைத்ததோடு, அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரத்தவர் இடையில் நூற்றாண்டு காலப் பகையை மறக்கச் செய்து சினேகத்தைத் தோற்றுவிக்க முடிந்தது. மதீனா சாசனம் ஹிஜ்ரத்துடனான நிகழ்வுகளில் சிறப்பு மிக்கதாகும். யத்ரிப் பற்றி எந்தளவு ஆழமான பின்னணியை நபியவர்கள் கொண்டிருந்து பல கோத்திரங்கள், இனக் குழுக்களுக்கிடையில் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வைத்ததார் என்பது அவர்களது ஆளுமையின் சிகரத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. மதீனா சாசனம்தான் அதுவரை ‘தஃவா குழு’ வடிவொன்றில் இருந்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிராந்தியத்தின் முக்கிய சக்தியாக நிலைமாறுவதற்குண்டான அத்திவாரத்தை இட்டுக்கொடுத்தது. 

நபியவர்களது சீறாவில் நிகழ்ந்த மகத்தான ஹிஜ்ரத் நினைவுபடுத்தப்படும் போது நாமும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஏராளம் அம்சங்கள் உண்டு. நபிகளாரிடத்தில் எத்தகைய தவக்குல் இருந்திருக்க வேண்டும்! எத்தகைய பொறுமையும் தியாகமும் அர்ப்பண சிந்தனையும் இருந்திருக்க வேண்டும்! எவ்வளவு உளத்தூய்மை இருந்திருக்கவேண்டும்! கஷ்ட-இலகு நிலைகளில் தளம்பல் கொள்ளாது எந்தளவு நிலைத்து நின்றிருக்கவேண்டும்! இறுதி வெற்றி குறித்த மனவுறுதியின் பலம் எவ்வளவு இருந்திருக்கும்! விளைவாக இஸ்லாம் மகத்தான பாய்ச்சலொன்றை நிகழ்த்தியது. இன்று நமது தலைமுறை வரைக்கும் தூய்மையாக இஸ்லாத்தின் தூது கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 

நபியவர்கள் மட்டுமல்ல அவர்தம் தோழர்களிடத்திலும் எத்தனை தியாகம் வெளிப்பட்ட தருணம் அது. பெரும் செல்வந்தர்களாக இருந்த நபித் தோழர்களும் அனைத்தையும் இஸ்லாத்தின் வாழ்வுக்காக இழக்கத் துணிந்து இழந்தனர். நபியவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டுப் பயணிக்கையில் கொண்டிருந்த அபார நம்பிக்கையைப் பார்த்து நாம் மெய்சிலிர்த்துப் போவோம். சொந்த ஊரில் இடமற்றிருக்கையில் சுராகா இப்னு மாலிக் என்பவனுக்கு அக்கால வல்லரசு கிஸ்ராவின் கிரீடத்தை அவனது தலையில் அணிவிப்பதாக வாக்குக் கொடுப்பது நபியவர்களது ஆழ்ந்த தூரநோக்கைக் காட்டிநிற்கின்றது. 

இறுதித் தூதைக் கருவறுத்துவிட வேண்டுமென்ற நோக்கில் ஷைத்தான் கூட ஹிஜ்ரத்தைத் தடுத்து நபியவர்களைப் படுகொலை செய்துவிட தாருந் நத்வாவிலே நடந்த இணைவைப்போரின் கூட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்தான். குறைஷியரின் இறுதி முயற்சி சூறா யாஸீனின் சில வசனங்களின் முன்னால் தூசாய்ப் பறந்தது. நபியவர்கள் வீட்டை விட்டு வெளிச்சென்று தோழர் அபூபக்ரின் இல்லமேகுகையில் அவ்விராப்பொழுதிலும் நபிகளார் வருகைக்காக அவ்வில்லம் வாயில் கதவு திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. உற்ற தோழர் உடனிருப்பது தஃவாவின் வெற்றியின் முதல்படியாகிறது. தவ்ர் குகையில் எதிரிகள் மிக அருகே வந்துவிட்ட சூழலில் தோழர் அபூபக்ர் அச்சவயப்பட்டு நாமிருவர் மட்டுமே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் “இன்னல்லாஹ மஅனா – நிச்சயமாக அல்லாஹ் எங்களோடு இருக்கிறான்” என நபியவர்கள் மொழிகையில் முழு உலகமும் இஸ்லாத்தின் தூதினுள் கட்டுண்டுவிடுகிறது. 

மக்கா வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பு ஹிஜ்ரத் என்று ஒன்றில்லை. ஆனால் அது எம்முன்னே விட்டுச் சென்றிருக்கும் பணி பாரியது! மகத்துவம் மிக்கது!!!

Credit: siaafdreams