(டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் உம்மத்துக்காக நீண்ட காலமாக உழைத்துக் கொண்டிருப்பவர். கீழே தரப்பட்டுள்ள ஆக்கம் “இஸ்லாமிய உம்மத்தின் சமகால நிலை மீது ஒரு வாசிப்பு” என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்துள்ள அவரது எண்ணற்ற விரிவுரைகளின் தொகுப்புகளில் ஒன்றிலிருந்து தரப்படுகின்றது. அவரது விரிவுரைகள் என்பது அவரது சிந்தனைகளினதும் நூல்களினதும் கூட்டு மொத்தத் தொகுப்புக்களாககக் கருதப்படக் கூடியவை. இந்த இதழை அவ்விரிவுரையின் இரண்டாம் பகுதி அலங்கரிக்கிறது. கடந்த பகுதியில் உம்மத், அதன் சமகால நிலை மற்றும் அதனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிய டாக்டர் கர்ளாவி அதன் தொடர்ச்சியோடு இப்பகுதியில் நவீனகால இஸ்லாமிய எழுச்சியலைகள் குறித்து ஆழமாக அலசுகிறார்.)
> அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் நியதிகளுக்கேற்ப நிகழ்வுகளை வாசித்தல்:
ஒரு முஸ்லிம் நிகழ்வுகளை இஸ்லாமியப் பார்வையோடு வாசிப்பான். இப்பிரபஞ்சத்தை இயக்குவிப்பவன் அல்லாஹ் என்ற பார்வையோடு இருக்கும் முஃமினாக விடயங்களை வாசிப்பான். மட்டுமல்லாது முஃமினானவன், நிகழ்வுகளை அல்லாஹ் காரண-காரிய விதிகளோடு தொடர்புபடுத்தியிருப்பதைக் காண்பான். அவை எந்தப் பிரதியீடோ மாற்றீடுமோ அற்ற இறை நியதிகள். “அல்லாஹ் வைத்த நியதியில் எந்தவொரு பிரதியீட்டையும் நீங்கள் காணவே மாட்டீர்கள்; அல்லாஹ் வைத்த நியதியில் எந்தவொரு மாற்றீட்டையும் நீங்கள் காணவே மாட்டீர்கள்” (ஃபாத்திர்: 43)
எனவே எந்த விடயத்தையும் வெறுமனே ‘சும்மா’ நிகழ்ந்து விட்டதென்று வாசிக்க முடியாது; கூடாது. பிரபஞ்சத்தில் சும்மா நிகழ்ந்திடும் ஏதும் கிடையாது. ஒவ்வொரு விடயத்துக்கும் காரணிகள் உண்டு; விளைவுகள் உண்டு. எனவே நாம் நியதிகளின் பின்னணியில் நிகழ்வுகளை வாசிக்க வேண்டும். இந்த நியதிகளை அல்லாஹ் வெறுமனே வைத்துவிடவில்லை; விளையாட்டுக்காக வைத்துவிடவும் இல்லை. முக்கியம் என்னவெனில் அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் வைத்துவிட்டிருக்கின்ற நியதிகளை நாம் கற்கவேண்டும். விடயங்கள் ஏதும் வெறுமேனேயோ சும்மாவோ அல்ல என்பதை நாம் அறிந்துள்ளோம். இது அவசியமானது.
இதுவே முஸ்லிமொருவன் நிகழ்வுகளை வாசிக்கும் கோணமாகும். இஸ்லாமிய வாசிப்பானது பாரம்பரிய மதரீதியான வாசிப்பு அல்ல. அதாவது சில உபந்நியாசிகளும் பேச்சாளர்களும் ஏதாவது அனர்த்தமொன்று நிகழ்ந்துவிட்டால் ‘இது நமது பாவங்களினால்தான், எமது கரங்களால் சம்பாதித்துக் கொண்டவைதான், அல்லாஹ்விடம் தவ்பா செய்துகொள்ளுங்கள்.’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இது உண்மைதான்: “ஏதும் துன்பம் உங்களைப் பீடித்தால் அது உங்கள் கைகளால் சம்பாதித்துக் கொண்டவையே, பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.” (அஷ்ஷூரா: 30)
‘எல்லாமே எம் பாவங்களினால்தான் நிகழ்கின்றன’ என்று மட்டும் சொல்வது போதாது, ‘அந்த பாவங்கள் என்பது என்ன? இவ்விடயத்தின் மீது இட்டுச் சென்ற பாவங்கள் என்ன?’ என்றும் கேட்டுக் கொள்ளவேண்டும்.
என்ன நடந்தது? எவ்வாறு நடந்தது? ஏன் நடந்தது? என்பதை உய்த்தறிய சரியான வாசிப்பு வேண்டும். இவற்றுக்கு இட்டுச் சென்ற காரணங்கள் என்னவென்று அறிய வேண்டும். அவை சிந்தனா ரீதியான காரணிகள், உளவியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள், பண்பாட்டு ரீதியான காரணிகள், அரசியல் காரணிகள் உட்பட்ட எந்தவிதக் காரணிகளாகவும் இருக்கலாம். இங்கு ஒரு காரணி மட்டும் இருக்காது.
> வரலாற்றுக்கு வலிந்த விளக்கங்களை ஏற்க முடியாது:
மனித நிலைமைகளை வாசிப்பதற்கு, மனித வரலாற்றை வாசிப்பதற்கு இங்கு சில வாசிப்பு முறைகள் இருக்கின்றன. அதனை ஒரு தலைப்பட்ச விளக்கம் என்பர். அதாவது சிலர் எல்லாவற்றையுமே பொருளாதாரத்தை வைத்து விளக்குவர். உதாரணத்திற்கு மார்க்ஸியம் போன்றவை. அவர்களிடம் மனிதன் ஓர் உற்பத்தி செய்யும் மிருகம்; மனிதர்களில் முக்கிய அம்சம் அவன் பொருள் உற்பத்தி செய்து தரவேண்டும் என்பார்கள் அவர்கள். மனிதன் ஒரு சிந்தனையாளன் என்றோ, அவன் ஒரு மதசாயல் கொண்டவன் என்றோ, அவன் ஒரு சமூகம் சார்ந்தவன் என்றெல்லாம் கூறிவிட மாட்டார்கள். அவன் உற்பத்தியாளன்; உற்பத்தியாளன் மட்டுமே; பொருளாதாரப் பார்வை மட்டுமே…
இங்கு இன்னும் சிலர் இருக்கிறார்கள் மனித நடத்தைகள் ஒவ்வொன்றுக்குமே அதற்கான தாக்கத்தை உளவியல் காரணிகளோடு ஆக்கிடுவோர் இருக்கின்றனர். இதற்கு உதாரணம் புகழ்பெற்ற உளப்பகுப்பாய்வுக் கொள்கையின் சிக்மன் ப்ரைட் அணியினர். அவர்கள் மனித நடத்தை ஒவ்வொன்றின் பின்னாலும் பாலியல் இச்சைகளை வைத்து நோக்கியோர். அதாவது அந்த ஒன்றுதான் மனித நடத்தை, பொருளாதாரம், அரசியல், சமூகவியல் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர். இதில் இன்னும் வினோத விளக்கங்களும் இச்சித்தாந்தத்திடம் உண்டு.
இன்னொருவர் அனைத்தும் அதிகார, ஆக்கிரமிப்பு ஆசையினாலே வருகின்றது என்பார். இன்னொரு புறம் புவியியல் ரீதியில் விளக்கம் கொடுப்போரும் உண்டு. புவியமைப்பும் சூழலுமே மனித நடத்தைகளில் தாக்கம் செலுத்துகிறது என அவர்கள் கருதுவர்.
நாங்கள் கூறுகிறோம்: நிச்சயம் மேலே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வலிந்த விளக்கங்களுமே நிகழ்வுகளுக்கான பிழையான காரணிகளை உங்களிடத்தில் உருவாக்கும். நாம் கூறுவது, ஒரு நிகழ்வுக்குப் பின்னாலேயே பல காரணிகளும் இருக்கும்; பல விளக்கங்கள் இருக்கும். அதில் பொருளாதாரம், புவியியல், உளவியல், மதம், அரசியல் என ஒவ்வொன்றுமே நிகழ்வொன்றில் காரணியாக தாக்கம் ஏற்படுத்த முடியுமானவை. அவ்வகையில் நாம் சரியான வாசிப்பையே கைக்கொள்ள வேண்டும். நிகழ்வுகள் குறித்த நமது பார்வை விசாலமாக இருக்கவேண்டும். இதுவே நம் உம்மத்தின் சமகால நிலை குறித்து நாம் வேண்டும் அணுகுமுறையாகும்.
> உம்மத்தின் சமகால நிலையை பத்து வருட வரலாற்றுக்குள் அறியலாமா?
சகோதரர்கள் சிலர் உம்மத்தின் சமகால நிலையைக் கற்க பத்து வருடங்கள் குறித்துப் பேசினால் நல்லதென்று விரும்புகின்றனர். யதார்த்தத்தில் அது போதாதென்றே நான் கருதுகிறேன். அதற்கென்று அலாதியான ஒரு விளக்கம் தேவையென்றே நான் கருதுகின்றேன். உதாரணத்திற்கு கடைசிக் கால் நூற்றாண்டு அல்லது பதினைந்தாம் ஹிஜ்ரி நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்கள் போன்ற நீண்ட காலப் பகுதியொன்று, பதினைந்தாம் ஹிஜ்ரி நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த உம்மத்துக்கு என்ன நிகழ்ந்தது என அறிவுப்பூர்வமாக விளங்கிக் கொள்ள அவசியமானது.
> ஒரு விரிவுரை மாத்திரம் போதுமா?
மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாரிய விளைவுகளைத் தந்த பல நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில் நடைபெற்ற மிகப் பாரிய நிகழ்வுகளை உதாரணம் கூறத் துவங்கினால்… உதாரணத்திற்கு மக்கா புனிதப் பிரதேசத்தின் மீதான ஆக்கிரமிப்பைக் கூறினால், அது பதினைந்தாம் ஹிஜ்ரி நூற்றாண்டின் மிக அபாயகரமான நிகழ்வு. அபயமளிக்கப்பட்ட பூமி யுத்தப் பிரதேசமாக மாறிய சந்தர்ப்பம். சரியற்ற கற்பனைகள், ஊகங்கள் மீது எழுந்தது அது. அதுபற்றிப் பேசவேண்டியது மிக நீண்டது.
ஈரானியப் புரட்சி என்பது இன்னொரு விடயம்.
அடுத்து வீரியம் பெற்ற இஸ்லாமிய எழுச்சியலைகள் குறித்துப் பேச வேண்டும்; இது மிக முக்கிய நிகழ்வு. இஸ்லாமிய விழிப்புணர்வு, இஸ்லாமிய புத்துயிர்ப்பு என மக்களால் பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்ட இது தனியாகப் பேச வேண்டிய மிக நீண்ட தலைப்பு.
அடுத்தது ஆப்கான் யுத்தம், இவ்யுத்தம் உலக வரலாற்றின் மாபெரும் சடவாத இராஜ்ஜியத்தை வீழ்த்த உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைந்த சந்தர்ப்பம். அது மாபெரிய சடவாத சக்தி. உலகின் இரண்டாவது பெரிய வல்லாதிக்கம். அதனைத் தொடர்ந்து சோவியத் என்ற பெரும் சக்தி எவ்வித முன்னறிவிப்புமின்றி விரைவில் வீழ்ந்தே போனது. டொனால்ட் ரீகனின் வார்த்தைகளின் படி உலகின் தீமைத் தேசமான சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் அதற்குப் பிரதியீடாக இஸ்லாமிய உலகம் மேற்கின் வருங்காலத்துக்கான அபாயகரமான எதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அடுத்து நிகழ்ந்த வேதனை குவைத் ஆக்கிரமிப்பு. அதன் வேதனைகள் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிகழ்வால் ஏற்பட்ட காயங்களுக்கான நிவாரணங்கள் இன்னும் அரை நூற்றாண்டுக்கு இழுபட்டுப் போகும் என நான் உணர்கிறேன்.
அடுத்து அல்ஜீரியத் தேர்தலில் இஸ்லாமியவாதிகள் பங்கேற்று தூய, சுதந்திர முறையில் மிகப் பெரும்பான்மையோடு பெற்ற வெற்றிகள், மற்றும் அதன் நிகழ்வுகள் இக்காலத்தின் முக்கிய நிகழ்வாகும்.
அடுத்து போல்கன் பிராந்திய பொஸ்னியா, கொஸோவோ யுத்தங்கள் முக்கிய நிகழ்வுகள்.
மேலும் சூடானில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியும் அதனைத் தொடர்ந்து எழுந்த இஸ்லாமிய அரசும் முக்கியமானவை.
மேற்குறித்த சிறு சிறு நிகழ்வுகள் ஒவ்வொன்றினதும் இறுதியில் வெடித்த மிகப் பெரும் நிகழ்வுதான் செப்டம்பர் 11 தாக்குதல்கள்.
நான் இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்குமான தொடர்பை நான் எவ்வாறு கூறப் போகிறேன் என நீங்கள்சிந்திக்கிறீர்கள்? இதன்படி நான் எவ்வாறு எம் உம்மத்தின் நிலையை அணுகப் போகிறேன்? இது ஒரு நீண்ட விரிவுரையை வேண்டி நிற்கும் அம்சம்.
> இஸ்லாமிய எழுச்சி:
நான் முக்கிய நிகழ்வுகளை மட்டும் தொடர்புபடுத்திக் கூறுகிறேன். அது இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் பலவீன நிலையிலிருந்து எழுந்த இஸ்லாமிய எழுச்சியோடு தொடர்பான விடயம். கண்ணிருந்து பார்த்த, செவியிருந்து கேட்ட அனைவரும் இவ் எழுச்சி குறித்து நன்கறிவர். அது உலகின் மூலை முடுக்கெங்கும் கிழக்காக மேற்காக அதன் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு சென்றதை நாம் நன்கறிவோம்.
திட உறுதி பூண்டு உழைக்கும் இவ்விளைஞர்கள் திங்களும் வியாழனும் நோன்பு நோற்கவும், குர்ஆன் திலாவத் செய்து ஸீறாவை வாசித்து ஆண்களும் பெண்களுமாக இஸ்லாமியப் பண்பாட்டுப் பயிற்சிக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததை நாம் கண்டோம்.
முஸ்லிம் பெண்மணிகள் மீண்டும் ஹிஜாபுக்கு மீண்டார்கள். சகோதரர்களே! எமது முஸ்லிம் பெண்மணிகள் ஒரு காலத்தில் மேற்குமயப்பட்டு நிர்வாணிகளாக தம்மை வெளிக்காட்டித் திரிந்தவர்கள். நான் அரபு நகர்களில் சென்றால் ஹிஜாபியப் பெண்மணிகளை அப்போது காண முடியாமல் இருக்கும். அறுபதுகளில் எல்லாம் இஸ்லாமியப் பெருநகர்களில் என்னென்னவோ பெயர் தெரியா மேற்கு ஆடைகளெல்லாம் அணிந்த முடி பழுத்துப் போன கிழவிகளெல்லாம் வீதிகளில் சுற்றுவர். இது நாம் கண்ட நிலைமை.
பின் முஸ்லிம் பெண்மணி சுய விருப்போடு ஹிஜாபைத் தேர்ந்தெடுத்தாள். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கலைக் கூடங்கள், உயர்கல்வி நிறுவனங்களின் யுவதியர் விருப்போடு ஹிஜாபைத் தேர்ந்தெடுத்தனர். அரபு இஸ்லாமிய உலகின் அடையாளமாக ஹிஜாப் பரவியது. இவையெல்லாம் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள். சந்தையிலும் சர்வதேச புத்தகக் கண்காட்சிகளிலும் இஸ்லாமிய நூல்கள் விற்பனையில் முன்னுக்கு வந்தமை கூட இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகளேயாகும்.
அல்ஜீரிய இளைஞர்கள் என்னிடம் கூறுவார்கள்: நாங்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சியை எதிர்பார்த்திருக்கிறோம். அங்கு நாங்கள் கண்காட்சி கூட வாயிலில் இரவிலிருந்து காத்திருப்போம். வாயில் திறந்ததும் அடித்துப் பிடித்து இஸ்லாமிய நூல்களைக் கொள்வனவு செய்து விடுவோம். இரண்டு மூன்று மணிநேரங்கள் கூடக் கழிந்திருக்காது இஸ்லாமிய நூல்கள் முடிந்து போயிருக்கும். இவ்வாறுதான் இஸ்லாமிய நூல்கள் மீதான தாகம் மிக அதிகரித்துக் காணப்படுகிறது. பலரின் வேண்டுகோளின்படி அல்ஜீரியாவில் நான், ஷெய்க் அல்கஸ்ஸாலி போன்றோர் நூல்களை பதிப்பிக்க தாராளமாக அனுமதி கொடுத்தோம். கொடுத்துவிட்டு இந்நூல்கள் அல்ஜீரியாவில் புரட்சி செய்யவேண்டும் என்றேன். அவ்வாறே அரபுலகில் முதல் இஸ்லாமியக் கட்சியாக அங்கு இஸ்லாமிய மீட்பு முன்னணி உருவாகிப் பெரும் புரட்சி வெடித்தது.
அல்ஜீரியாவுக்கு சென்று ஜும்ஆவுக்கென நான் சென்ற போதில் அப்பள்ளிவாசலை விட மும்மடங்கு அதிகமாக மக்கள் திரண்டிருந்தனர். ஒன்றரை லட்சமாக இரண்டு லட்சமாக அவர்கள் திரண்டிருந்தனர். வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயிருந்தது. அங்கிருந்த கத்தர் நாட்டுத் தூதர் என்னிடம் ‘அவரது மகன் ஒரு மணிக்கு ஜும்ஆ இருந்த போதும் ஷெய்க் யூஸுப் அல்கர்ளாவிக்கு அருகிலிருந்து தொழ வேண்டுமென்று பதினொரு மணிக்கே சென்றுவிட்டதாகவும் அப்போதும் கூட பள்ளிவாசலுள் அவரால் நுழைய முடியாது போய்விட்டதாகவும்’ கூறினார். அந்தளவு பள்ளிவாயல் நிரம்பிப் போயிருந்தது.
இந்த இஸ்லாமிய எழுச்சி என்பது மூளைகளும் சிந்தனைகளும் இணைந்த எழுச்சி. அது நூல்களோடும் நம் விருப்போடும் கடின சித்தத்தோடும் இஸ்லாமியப் பற்றுறுதியோடும் எழும் எழுச்சி. அது உணர்வுகளோடு கலந்த எழுச்சி. அது அனைத்து வகை இஸ்லாமிய விவகாரங்களுடனும் உத்வேகத்துடனும் அன்புடனும் வாழும் எழுச்சியாகும்.
இவ்வெழுச்சி தான் பொருளாதாரப் பகுதியில் இஸ்லாமிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் என நடைமுறை ரீதியான நல்ல பல விளைவுகளையும் தந்தது. பலரும் சொன்னார்கள்: வங்கித் துறையில் இறங்காதீர்கள்; வட்டியின்றி வங்கியில்லை என்றார்கள். ஆனால் அனைத்தையும் பொய்ப்படுத்தி இஸ்லாமிய வங்கிகள் எழுந்து நின்றன. இவற்றை விளைவித்ததும் இஸ்லாமிய எழுச்சிதான்.
இஸ்லாமிய ஜிஹாத் என்று வருகின்ற போது, பலஸ்தீன இன்திபாழாவின் முதலாம் கட்டம் தொட்டு, அது காஸாவின் பள்ளிவாயல்களில் துவங்கி அது இன்று பேரெழுச்சியாகப் பரிணமித்திருக்கின்றது.
இஸ்லாமிய எழுச்சி இவ்வாறு பல பரிமாணங்கள் எடுத்து அனைவர் மீதும் மாற்றத்துக்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. மதச் சார்பற்றவர்கள் வரைக்கும் அதனை திரும்பி நோக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
(தொடரும்…)
டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி
0 Comments