(டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் அறிமுகப்படுத்தத் தேவையற்ற அளவு சமகாலத்தில் இந்த உம்மத்தின் ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்பவர். உம்மத்துக்காக நீண்ட காலமாக உழைத்துக் கொண்டிருப்பவர். கீழே தரப்பட்டுள்ள ஆக்கம் நூல் வடிவில் வெளிவந்துள்ள அவரது எண்ணற்ற விரிவுரைகளின் தொகுப்புகளில் ஒன்றிலிருந்து தரப்படுகின்றது. அவரது விரிவுரைகள் என்பது அவரது சிந்தனைகளினதும் நூல்களினதும் கூட்டு மொத்தத் தொகுப்புக்களாககக் கருதப்படக் கூடியவை. இங்கு ஓரளவு சுருக்கமாகத் தரப்பட்டிருப்பது முதலாவது பகுதி; அடுத்த இரண்டு பகுதிகளும் இன்னும் சுவாரஷ்யமும் முக்கியமும் மிக்கவை. உரையில் உம்மத், அதன் சமகால நிலை மற்றும் அதனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஆழமாக விளக்குகிறார்.)
இஸ்லாமிய உம்மத் குறித்து நாம் பேசும் போது முதலில் உம்மத் என்ற பதத்தை அறிந்து கொள்ள வேண்டும். இங்கு உம்மத் என்பதன் மூலம் இஸ்லாமின் அழைப்புக்குப் பதிலளித்து விட்ட சமூகமாக உள்ள உலக முஸ்லிம்களையே நான் இங்கு குறிப்பிடப் போகிறேன். அழைப்பு கொடுக்கப்பட வேண்டிய சமூகம் ஒன்றும் உலகில் பாரியளவில் உள்ளது. அவ்வாறு அழைப்புக் கொடுபட வேண்டிய உம்மத் என்கையில் அது முழு மானிட சமுதாயத்தையும் உம்மத் என்ற சொல்லுக்குள் உள்ளடக்கிவிடும். 

“(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் யாவருக்கும், அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்: அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது.” (அல்அஃராஃப்: 158) 

“(நபியே!) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவன்றி நாம் உம்மை அனுப்பவில்லை.” (அல்அன்பியாஉ: 107) 

“தன் அடியார் (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும்) அல்புர்கானை, அகிலத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இறக்கி வைத்தவன் பாக்கியமுடையவன்.” (அல்புர்கான்: 1) 

எனினும் உலாகளாவிய உம்மத் என்பதை விடுத்து அழைப்புக்கு பதிலளித்து விட்ட; அல்லாஹ்வை ரப்பாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாகவும் ரஸூலாகவும் அல்குர்ஆனை வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டுவிட்ட இஸ்லாமிய உம்மத் பற்றியே பேசுகிறோம். அவ்வகையில் நாம் உலகின் இருபெரும் கடல்களுக்கு மத்தியில் ஜகார்த்தாவிலிருந்து ரபாத் வரையில் கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலுமுள்ள இஸ்லாமிய உம்மத்தின் சமகால நிலைமைகளை புரிந்துகொள்ள விழைகிறோம்.
 
அரபுகள் என்போர் இந்த உம்மத்தின் ஒரு பகுதியினரே; உம்மத்தின் சமகால நிலைமைகள் எனும் போது நமது எண்ணத்தில் மிகப்பெரும் புவியியல் நிலப் பகுதியொன்று தோன்றும். ஆனாலும் உம்மத் என்ற சொல்லுக்குள் இஸ்லாமிய உலகின் புவியியல் எல்லைக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களும் உள்ளடங்குவர். முஸ்லிம்களில் காற்பங்கினருக்கு மேல் சிறுபான்மையினராக வாழுகின்றனர். அவர்களில் இந்தியாவில் போன்று 160 மில்லியன்களை எட்டிய மிகப்பெரும் சிறுபான்மைகளும் உள்ளன. இது தவிர ஐரோப்பா, அமெரிக்கா, தூர கிழக்கு, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இன்ன பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் உம்மத் என்ற கருத்துக்குள்ளால் வருகின்றனர். சமகால உம்மத்தின் நிலைகள் தொடர்பில் அறிய முற்படும் போது அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களையும் உள்ளடக்கியே அது அமையும். 

இஸ்லாமிய உம்மத்தின் சமகால நிலைமைகளை அறிந்துகொள்வது என்பது… 

இஸ்லாமிய உம்மத்தின் சமகால நிலைமைகளை அறிந்துகொள்வது பல விடயங்களைத் தன்னுள் உள்ளடக்கியதாகும். 

குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு விளங்குதல்: 

உம்மத்தின் சமகால நிலைமைகளை அறிந்து கொள்வது என்பது நன்கு ஆராய்ந்து, நுணுக்கமாக அதன் பின்னணிகளோடு அறிந்துகொள்வதைத்தான் குறிக்கின்றது. நாம் ‘இக்ரஃ’ சமூகம். “உமது இரட்சகனின் பெயரால் வாசிப்பீராக!” (அல்அலக்: 1) வாசிப்பு என்பது எழுதப்படுவதை வாசிப்பது மட்டுமல்ல. அப்படி இருந்திருப்பின் எழுதவோ எழுதியவற்றை வாசிக்கவோ தெரியாத முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இந்த ஏவல் வெற்று விடயமாகத்தான் இருந்திருக்கும். அவ்வாறாயின் ஏன்… எதை… வாசிக்க ஏவப்பட்டார்? 

எழுதப்படுவதை மட்டும் தான் வாசிப்பதென கருத்துக் கொள்ள முடியாது. வாசித்து அறிந்து கொள்ள வரி வரியான அல்குர்ஆன் இருப்பது போலவே, பார்த்து அறிந்து கொள்ளும் பிரபஞ்சமும் இருக்கின்றது. இதனாலே எமது முன்னைய அறிஞர்கள் அல்குர்ஆனை பேசுகின்ற இறை அத்தாட்சி என்றும் பிரபஞ்சத்தை மௌனமான இறை அத்தாட்சி என்றும் வர்ணித்தனர். 

அல்லாஹ், பேசுகின்ற இறை அத்தாட்சியின் உண்மைத் தன்மைக்கென மௌனமான இறை அத்தாட்சிகளின் மீது சத்தியம் செய்கிறான்: 

“நட்சத்திரங்கள் மறையுமிடங்கள் மீது நான் சத்தியம் செய்கிறேன், நீங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக இது மகத்தானதொரு சத்தியம் என்பதை அறிந்துகொள்வீர்கள், நிச்சயமாக இது கண்ணியமிக்க குர்ஆனாகும், இது (லவ்ஹுல் மக்பூள்) என்ற பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது, பரிசுத்தமானோர் தவிர எவரும் இதனைத் தொட மாட்டார்கள், அகிலத்தாரின் இரட்சகனால் இது இறக்கப்பட்டுள்ளது.” (அல்வாகிஆ: 75-80) 

நாம் இந்த இரண்டு வகையான வசிப்புக்கெனவும் ஏவப்பட்டுள்ளோம். 

வரலாற்றை வாசித்தறிதல்: 

வரலாற்றை வாசிப்பது என்பதுவும் ஏவப்பட்ட ஒரு விடயமே: 

“அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறாயின்) அதன் மூலம் உணர்ந்து கொள்ளும் இதயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அல்லது கேட்கக் கூடிய செவிகள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அவர்களுடைய பார்வைகள் குருடாகவில்லை. மாறாக (அவர்களது) நெஞ்சுகளில் உள்ள இதயங்களே குருடாகிவிட்டன.” (அல்ஹஜ்: 46) 

முன் சென்றவர்கள், முன்சென்றவர்களது தடயங்களை வாசித்து அறிந்துகொள்ள வேண்டும்: 

“நிச்சயம்! உங்களுக்கு முன்னரும் பல கட்டங்கள் கடந்து சென்றுவிட்டன. எனவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து பொய்யாக்கியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைப் பாருங்கள்.” (ஆலு இம்ரான்: 137) 

இது வரலாற்றின் மூலம் வரலாற்று நிகழ்வுகளை அறிந்துகொள்வதாகும். 

சமகாலத்தைப் புரிந்து கொள்ளுதல்: 

அடுத்து வரலாறாக மாறப் போகும் சமகாலத்தை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதைய வரலாறென்பது அன்றைய நிகழ்வுகளாக இருந்தவையே. எனவே சமகாலத்தின் நல்லவை-கெட்டவைகளை, இனியவை-கசப்பானவைகளை, சரி-பிழைகளை, மென்மையான-கடினமானவைகளை அவ்வாறு அவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் ‘இக்ரஃ’ சமூகத்திடம் வேண்டப்பட்டுள்ளது. 

‘அல்லாஹ்வின் பெயரால்’ அறிந்துகொள்ளும் நிபந்தனை: 

நாம் அறிந்துகொள்வது என்பது அல்லாஹ்வின் பெயரால் இருக்க வேண்டும். “உமது இரட்சகனின் பெயரால் வாசிப்பீராக!” (அல்அலக்: 1) சிலர் மனோ இச்சைக்காக; சிலர் தாகூத்களுக்காக; சமூகத்துக்காக சிலர்; இன்னும் சிலர் பலப்பல தேவைகளுக்கென அறியும் முயற்சியில் ஈடுபடுவர். எனினும், விசுவாசம் கொண்ட உம்மத்தை சேர்ந்த முஃமினானவன் ‘அல்லாஹ்வின் பெயராலே’ அவனுக்காகவே அறிவான். அவனே தெளிவான உண்மையாவான்: 

“அவனே உங்களது உண்மையான இரட்சகனாகிய அல்லாஹ்; உண்மைக்குப் பின் வழிகேட்டைத் தவிர (எஞ்ச்சியிருக்கப் போவது) என்ன? (இதனை விட்டும்) எங்கு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்?” (யூனுஸ்: 32) 

அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொள்ள முற்படும் போதே சத்தியத்தின் பெயரால் அறிகிறோம்: 

“இதற்கு முன்னிருந்தோ, இதற்கு பின்னிருந்தோ பொய் (குர்ஆனாகிய) இதில் வராது. (இது) தீர்க்கமான அறிவுடைய மிக்க புகழுடையவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளது.” (ஃபுஸ்ஸிலத்: 42) 

சமகாலத்தை வாசித்து அறிந்து கொள்ளும் முறைமை: 

சமகால யதார்த்தங்களை வாசித்து அறிந்து கொள்ள நாம் வேண்டப்பட்டிருக்கிறோம். அது இன்றைய நாட்களில் நாம் இப்போது வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பது போன்று வேதனை மிக்கதாகவும் கசப்பானதாகவும் இருப்பின், நாம் அறிவது பூராகவும் வேதனையாகவே இருக்கும். 

அவ்வாறாயின் எவ்வாறு வாசித்தறிவது? 

பூரணமாக அனைத்தையும் உள்ளடக்கிய அறிதல்: 

நமக்கு அனைத்துப் பரப்புக்களையும் உள்ளடக்கி மிக சரியானதை சமநிலையோடு அறிய வேண்டிய தேவை இருக்கின்றது. தத்தமக்கு தேவையானவாறு உள்ளிருந்தோ வெளியே இருந்தோ எழுதப்படுகின்ற பக்க சார்பானவற்றை மட்டுமே வாசிப்போரும் இருக்கின்றனர். வாசித்து விட்டு அவற்றை பலர் சரிபார்க்காது அவ்வாறே உள்வாங்கிவிடுகிறார்கள். இது பூரணமாக அறிந்துகொள்ளாத சமநிலையற்ற நிலை. அவ்வகையில் நாம் ஒன்றை அறிய முற்படும் போது வெற்றிகளோடு தோல்விகளையும், உயர்வுகளோடு தாழ்வுகளையும் அறிந்துகொள்ள வேண்டும். 

அல்லாஹ் கூறுகிறான்: “விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் நீதியை நிலை நாட்டியவர்களாக அல்லாஹ்வுக்கு சாட்சி கூறுபவர்களாக இருங்கள்! அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ விரோதமாக இருந்த போதிலும் சரியே!” (அந்நிஸாஉ: 135) 

“எந்த சமூகத்தவரின் விரோதமும் நீங்கள் நீதி செலுத்தாமல் இருக்க நிச்சயம் உங்களைத் தூண்டிவிட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள்! நிச்சயமாக அதுவே இறையச்சத்துக்கு மிகுந்த நெருக்கமானது” (அல்மாஇதா: 8) 

நீங்கள் நிகழ்காலத்தை மிக சரியாக மதிப்பிட விரும்பினால், உங்களோடு நீதியாக இருங்கள்! உங்கள் எதிரியோடும் நீதியாக இருங்கள்! 

முழுமையான வாசிப்பு என்பது சமகாலத்தை அதன் அனைத்துப் பரிமாணங்களிலும் விளங்குவதாகும். பொருளாதாரம், அரசியல், சிந்தனை, மதம், பண்பாடுகள், குடும்பவியல், சமூகவியல், இராணுவம், ஜிஹாத், பிராந்திய-சர்வதேச விவகாரங்கள், சந்தர்ப்ப ரீதியான முக்கியத்துவ மிக்க விடயங்கள் என அனைத்தும் உள்ளடங்கும். 

இவற்றில் ஒன்றை விட்டுவிட்டு ஒன்றை அறிந்துகொள்ள முயல்வது சமகாலத்தை அறிந்துகொள்ள உதவாது. 

எல்லை மீறிய மற்றும் அலட்சியமான கருத்துக்களை விட்டும் தூரமாக இருத்தல்: 

சிலர் எப்போதும் மைக்ரஸ்கொப் வைத்தது போன்று குறைகளை மட்டுமே தேடிக் கொண்டிருப்பர்; விதையை விருட்சமாகக் காட்டுவர்; குட்டிப் பூனையை ஒட்டகமாகக் காட்டுவர். நீங்கள் விடயங்களை உள்ளவாறே கண்டுகொள்ள முயல வேண்டும். குறைகளைப் பெருப்பிக்கக் கூடாது. குறித்த விடயங்களின் அதே நேரம் சிறப்புகள், நலவுகளையும் மறந்து விடக் கூடாது. 

சிலர் சில விடயங்களைப் பேசும் போது நூற்றுக்கணக்கான மடங்குகள் ஊதிப் பெருப்பித்து விடுவர். உதாரணத்திற்கு இஸ்ரேல் பற்றிக் கூறப் போனால் அவர்கள் தோற்கடிக்கப்பட முடியாத சக்திகள் போலவும் அனைத்தும் அவர்களது சித்தப்படியே நடக்கின்றது போலவும் நாமெல்லாம் வெறும் சதுரங்கக் காய்கள் போலவும் கூறிவிடுகின்றனர். இவையெல்லாம் நாம் எமக்கென திட்டங்கள் வகுத்துக் கொள்ளாமையின் விளைவுகளாகும். இது நம்மையே சிறுமைப்படுத்துவதாகும். 

நான் கூறுகிறேன்: இவ்வகைப் போக்கு அதிக ஆபத்தானது. எதிரியைப் பிரமாண்டமாக்கி உங்களை நீங்களே சிறுமைப்படுத்துவதும் அல்லது சிறு விடயம் ஒன்றை பெருப்பித்துக் கட்டுவதும் கண்டிக்கத்தக்கதாகும். இவ்விடத்தில் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் வெற்றியையும் பின்னர் தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்த உஹத் போராட்டம் குறித்து அல்குர்ஆன் கூறும் பாணியை அவதானிக்க வேண்டும்: 

“இன்னும் அவன் அனுமதி கொண்டு (எதிரிகளான) அவர்களை நீங்கள் அழித்த சமயத்தில் அல்லாஹ் நிச்சயமாக தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். முடிவாக நீங்கள் கோழைகளாகி உங்களுக்கிடப்பட்ட கட்டளைகளில் தர்க்கித்துக் கொண்டும் இருந்தீர்கள்; நீங்கள் எதை விரும்பினீர்களோ அதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறு செய்ய ஆரம்பித்தீர்கள். உகங்களில் இம்மையை விரும்புவோரும் உண்டு; மறுமையை விரும்புவோரும் உண்டு. பின்னர் உங்களை சோதிப்பதற்காக அவ்வெதிரிகளை விட்டும் உங்களைத் திர்ப்பினான். மேலும் நிச்சயமாக அவன் உங்களை மன்னித்து விட்டான். அல்லாஹ்வோ விசுவாசிகள் மீது பேராற்றலுடையவன்.” (ஆலு இம்ரான்: 152) 

இங்கு அல்குர்ஆன் ஸஹாபாக்களே எதிர்பார்க்காத விதத்தில் அவர்களிலும் உலகத்தை விரும்புவோர் இருந்தனர் கூறிவிட்டதாக இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவிக்கிறார்கள். இக்கருத்து அவர்கள் உஹுத் போராட்டத்தின் போது கனீமத்துகளின் பின்னால் சென்றதை சாடுகின்றது. இது அல்குர்ஆன் ஒரு நிகழ்வை அதன் யதார்த்தத்துடன் எடுத்துக் கூறும் பாங்கு. 

முக்கியமாக நமது அறிதல் வெறும் நுனிப்புல் மேய்தலாக இருந்திடக் கூடாது. ஒவ்வொன்றும் ஏன் நடந்தது? தூண்டற் காரணிகள் என்ன? அதன் நோக்கங்கள் என்ன? பின் விளைவுகள் என்ன? போன்றவற்றுக்கான விடைகளும் நம்மிடம் இருக்க வேண்டும். அதுதான் பூரணமாக அனைத்தயும் உள்ளடக்கிய சமநிலை வாசிப்பு.
 
இன்று எல்லோரும் தம் சிந்தனைப் பின்புலத்துக்கு ஏற்ற வகையில் வாசித்து அறிகிறார்கள். மார்க்சியர்கள் தம் சிந்தனைகள், கோட்பாடுகளின் படி நிகழ்வுகளை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் சொல்லிக் கொடுக்கின்ற படி அனைத்துக்கும் பின்னால் சடவாதக் காரணிகளே தாக்கம் செலுத்துகின்றது; அவைதான் சிந்தனைகளை உருவாக்குகின்றது; பொருளாதாரம்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது; உற்பத்திகள் காரணமாகத்தான் இன்ன இன்ன விடயங்களெல்லாம் நிகழ்ந்தன என்றவாறாக விளக்கமளித்து விடுகின்றனர். இன்னொரு புறம் லிபரல்வாதிகள் தமது சுயநல கோட்பாடுகளின் படி அனைத்தையும் விளக்கி நிற்கின்றனர். 

டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி
தமிழில்: எம்.எஸ்.எம். ஸியாப் நளீமி