கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஜீவா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் இவர்கள் கேரளாவின் தேக்கடி பகுதியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத் தாயாரான ஷோபனா ஆகிய மூவரும் கேரளாவில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

இந்நிலையில் ஷோபனா பிரமோத் மற்றும் ஜீவா ஆகியோருக்கு நிலம் வாங்கும் விஷயம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் செய்துள்ளனர். சம்பவ நடந்த அன்று, அறையில் இருந்து யாரும் வெளிவராத நிலையில் அங்கு வேலை செய்யும் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்த இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து பார்த்துள்ளனர். 

கதவை திறந்து பார்த்த ஊழியர்கள் ஜீவா கட்டிலில் சடலமாக கிடப்பதையும், பிரமோத் மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரிக்கையில் பிரமோத் மற்றும் அவரது தாயார் சோபனா ஜீவாவை கொலை செய்துவிட்டு அந்த பயத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.